சென்னை: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மருத்துவத்துறையில் கர்ப்பிணிகளுக்கான மருந்துகள் வாங்கியதில் ரூ.77 கோடி வரை நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இத்திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் கமலாலயத்தில் நேற்று (ஜூன் 05) செய்தியாளர்களை சந்தித்த அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், அதனை மறுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள தகவலில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு செயல்படுத்தி வரும் மகப்பேறு மகளிருக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வரப்பெற்ற செய்திக்கான விளக்கங்கள்.
1. அண்ணாமலை குற்றச்சாட்டு: இரும்புச்சத்து சிரப் கூடுதலான விலைக்கு வாங்கியதால் அரசுக்கு இழப்பு
அரசு பதில்: அம்மா தாய் சேய் ஊட்டச்சத்து பெட்டகத் திட்டம் 2018 ஆம் ஆண்டு முதல் அரசாணை: 118 குடும்பநலத் துறை (P2) தேதி 02.04.2018 மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, 12.06.2018 தேதியிட்ட இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத்துறை அவர்தம் கடிதத்தில் ஒவ்வொரு பெட்டகமும் ரூ.2000/- மதிப்பில் 8 வகையான பொருள்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொன்றின் தரம் குறித்தும் குறிப்பிடப்பட்டு உள்ளன.
இதில் இரும்புச் சத்து மற்றம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிரப்பும் ஒன்றாகும். இதன் சரிவிகித கலவை 2018 ஆம் ஆண்டிலேயே ஊட்டச்சத்து நிபுணர்களைக் கொண்டு கலந்து ஆலோசித்துத் தெரிவிக்கப்பட்ட கலவை ஆகும். கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான பிரத்தியேகமான கலவை பின்வருமாறு, மேற்கண்ட இரும்பு சத்து சிரப்பானது 200 மி.லி பாட்டில் ரூபாய். 74.65/- என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டது.
இதன் சந்தை மதிப்பு பாட்டில் ஒன்று ரூபாய். 112/- ஆகும். எனவே ஒரு பாட்டிலில் ரூபாய். 37.35/- அரசுக்கு மிச்சம் ஆகின்றது.
மேலும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் அடிப்படை அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் (EDL) உள்ள இரும்பு சிரப் என்பது 100ml கொண்ட பாட்டில். இதன் பயன்பாடு இரும்புச் சத்து குறைப்பாடு உள்ள குழந்தைகளுக்கானது.
அதில் உள்ள சத்துக்கள்; Elemental Iron 20mg & Folic Acid 100mcg எனவே மேற்கண்ட தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் இரண்டு இரும்புச் சத்து சிரப்புகளும் வெவ்வேறு பயன்பாட்டிற்கானது மற்றும் வெவ்வேறு கலவைகளைக் கொண்டது ஆகும். எனவே இதன் ஒப்பிடு என்பது முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்குப் புறம்பானது.
2. குற்றச்சாட்டு: ஆவின் வழங்கும் டயரி ஓயிட்னர் பதிலாக, தனியாரின் Pro-PL பவுடர் வாங்கயிருப்பதாகவும், அதனால் அரசிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
அரசு பதில்: அம்மா தாய் சேய் ஊட்டச்சத்து பெட்டகத் திட்டம் 2018 ஆம் ஆண்டு முதல் அரசாணை: 118 குடும்பநலத் துறை (P2) தேதி 02.04.2018 மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, 12.06.2018 தேதியிட்ட இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத்துறை அவர்தம் கடிதத்தில் ஒவ்வொரு பெட்டகமும் ரூ.2000/- மதிப்பில் 8 வகையான பொருட்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொன்றின் தரம் குறித்தும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதில் Mothers Health Mix என்னும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பவுடர் வகையும் ஒன்றாகும். இதில் உள்ள கலவையானது ஊட்டச்சத்து நிபுணர்களைக் கொண்டு கலந்து ஆலோசித்து தெரிவிக்கப்பட்ட கலவை ஆகும். மேலும் உலக சுகாதார அமைப்பால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட சரிவிகித ஊட்டச்சத்து கலவை ஆகும்.
இதன் கொள்முதல் விலை 500 கிராம் ரூபாய். 460.50. இதன் சந்தை விலை ரூபாய். 588.00. எனவே ஒரு பாட்டிலில் ரூபாய். 127.50 அரசுக்கு மிச்சம் ஆகின்றது. மேலும் ஆவினில் உள்ள டயிரி ஓயிட்னர் எனும் பால் பவுடர் இத்தகைய ஊட்டச்சத்து கலவைகளைக் கொண்டது அல்ல. மேலும் 08.04.2022 தேதியிட்ட கடிதத்தில் ஆவினால் தயாரிக்கப்படும் பவுடர் குறித்த ஆய்வு மற்றும் சாத்திய கூறுகளுக்கான முடிவு எட்டப்படாத நிலையில் சென்ற வருடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட அதே Mother Health Mix கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டது.
எனவே ஆவினால் தயாரிக்கப்படும் health mix தவிர்க்கப்பட்டு தனியாரின் Pro-PL Health Mix அதிக விலைக்கு வாங்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது மற்றும் அடிப்படை ஆதாரமற்றது. அம்மா தாய் சேய் ஊட்டச்சத்து பெட்டகத் திட்டம் 2018 ஆம் ஆண்டு முதலே உரிய அரசாணைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் ஆகும்.
கடந்த காலங்களில் சுமார் 17.5 லட்சம் பெட்டகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு உரிய காலங்களில் வழங்கப்பட்டு உள்ளது. அவ்வாறாக வழங்கப்பட்ட பெட்டகங்களில் எவ்வித குறைபாடும் இன்றளவும் தெரிவிக்கப்படாத காரணத்தினால் அதன் கூறுகளான இரும்புச் சத்து சிரப்பு மற்றும் Mother Health Mix ஆகியவைகளின் கலவைகளில் எவ்வித மாற்றமும் கோரப்படவில்லை.
மேலும் வரும் வருடங்களுக்கான கொள்முதல் டெண்டர் கோரப்பட்டு, டெண்டர் வழங்கிய கம்பெனிகளின் தரவுகள் சரிபார்ப்பு பணி மட்டுமே முடிவடைந்துள்ளது. மேலும் பொருட்களின் தரம் மற்றும் தரவு சரிபார்ப்பு முடிவடையாத நிலையில், ஒரு குறிப்பிட்ட கம்பெனிக்கு கொள்முதல் ஆணைகள் ரூபாய். 450 கோடிக்கு வழங்கப்பட்டது என்னும் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் அரசின் நற்பெயர்க்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கர்ப்பிணிகளுக்காக ’ஆவின் இருக்க... அனிதா எதற்கு?’: - அண்ணாமலை