சென்னை: பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் பள்ளிகளில் பாடத் திட்டத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (மார்ச். 16) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன், பல்கலைக்கழகத் துணைவேந்தர் கௌரி, தமிழ்நாடு உயர்கல்வி மன்றச் செயலர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக் கூட்டம் தொடங்கிய உடன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆங்கிலத்தில் வரவேற்புரை நிகழ்த்தினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் பொன்முடி தமிழில் பேச வேண்டும் என அறிவுறுத்தினார். கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடாமல் வரவேற்புரையை நிகழ்த்தினர். அப்போது குறுக்கிட்டு அமைச்சர் பொன்முடி தமிழ்த் தாய் வாழ்த்துப் பாட அறிவுறுத்தினார்.
அப்போது அமைச்சர் பொன்முடி பேசியதாவது, "கல்லூரிகளில் மத வெறியைத் தூண்டும் விதமாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன. அது குறித்து விவாதிக்கவுள்ளோம். நமது மாநிலத்திற்கான கல்விக் கொள்கை தயாரிப்பதற்கான நிபுணர் குழு விரைவில் அமைக்கப்படும். அடுத்த கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்விற்கான ஆரம்பக் கட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம் குறைந்ததாக நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ள நிலையில், பல்கலைக்கழகத்தின்கீழ் இணைப்பு பெற்ற கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில் கல்வியின் தரத்தை உயர்த்துதல், ஆராய்ச்சிக் கல்வியை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
புதிய கல்விக் கொள்கையில் உள்ளவற்றில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இல்லம் தேடி கல்வி திட்டம் உள்ளிட்டவை முதலமைச்சரின் கனவுத் திட்டமாகும். புதிய கல்விக் கொள்கையில் உள்ள சிலவற்றை ஏற்றுக் கொள்ளவும், குறைகளை களைய வேண்டும் எனவும் கூறுகிறோம். அதேநேரத்தில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: "யாரும் அதிமுகவினரை மிரட்ட முடியாது" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்