சென்னை: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் செந்தில் தலைமை வகித்தார். சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவி சங்கர், மாநில செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரசு மருத்துவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி செலவில் சம்பளம் வழங்கும் அரசாணை 293-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு கூடுதல் பணி நேரம் வழங்கியதை திரும்பப் பெற்று, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணி நேரத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் செந்தில் கூறுகையில், "அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில் சராசரியாக 20 சதவீதம் பேர்தான் மருத்துவக் காப்பீட்டில் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவ காப்பீட்டை முன்னிறுத்தி மாநில அளவில் ஆய்வு செய்து மருத்துவர்களுக்கு குறியீடுகள் வழங்கப்படுகின்றன. அதுபோன்ற குறியீடு பெறாத மருத்துவர்களுக்கு, பணியிட மாற்றம் போன்ற தண்டனை வழங்கப்படும் என அச்சுறுத்துவது தவறானது.
மருத்துவர்களுக்கு இன்சூரன்ஸ் டார்கெட் வைத்து அதன் மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்த வேண்டும். இக்கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தர்ணா போராட்டம் நடத்தப்படும். மார்ச் 15ம் தேதி அனைத்து அரசு மருத்துவமனைகளில், அவசர சிகிச்சை பணியில் இருக்கும் மருத்துவர்களை தவிர, பிற மருத்துவர்கள் விடுப்பு எடுத்து தர்ணா போராட்டம் நடத்தப்படும்" என்றார்.
இதையும் படிங்க: மீண்டும் திமுகவை சீண்டும் ஆளுநர்.. டிகேஎஸ் இளங்கோவன் ஆவேசம்!