சென்னை: உத்தமத் தியாகி ஈஸ்வரனுக்கு ஈரோடு மாவட்டத்தில் திருவுருவச் சிலையும் அரங்கமும் அமைத்திட ரூ .2.60 கோடி நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு இன்று (நவ.30) அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த 06.09.2021 அன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், 2021-2022 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், "கொங்கு மண்டலத்தில் ஏறக்குறைய 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் நீர்ப்பாசனத் திட்டமான கீழ்பவானி பாசனத் திட்டம் கொண்டுவர முக்கியக் காரணமாக இருந்தார், உத்தமத் தியாகி ஐயா ஈஸ்வரன். ஈரோடு தொகுதியின் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சுமார் 16 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.
அவரின் நினைவைப் போற்றும் வகையிலும், இன்றைய தலைமுறையினரும் அவர் செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ளும் வகையிலும் ஈரோடு மாவட்டத்தில் திருவுருவச்சிலை மற்றும் அரங்கம் அமைப்பதற்கு ரூ.2.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் " என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, பொதுப்பணித்துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர், உத்தமத் தியாகி ஈஸ்வரனுக்கு ஈரோடு மாவட்டத்தில் திருவுருவச் சிலையும் அரங்கமும் அமைத்திட 2022-2023ஆம் நிதியாண்டிற்கான செந்தர விலைப்பட்டியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள ரூ .2,60,00,000 கோடி, திட்ட மதிப்பீட்டினை அனுப்பி வைத்து, அத்திட்ட மதிப்பீட்டிற்கு நிர்வாக அனுமதியும், நிதி ஒப்பளிப்பும் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக தொடர்ந்து ஜனநாயக யுத்தம் நடத்துகிறது - தொண்டர்களுக்கு ஸ்டாலின் மடல்