சென்னை: ஆவின்(Aavin) நிறுவனம் பால் மட்டுமன்றி மோர், லஸ்ஸி, ஐஸ்கிரீம், நெய், இனிப்பு வகைகள் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை அனைத்துத் தரப்பினரும் விரும்பி வாங்குகின்றனர். மேலும், ஆவின் நிறுவனத்தில் பாலுக்கு அடுத்தபடியாக மிக அதிகம் விற்பனையாகும் பொருளாக இருப்பது நெய் தான்.
இந்த நிலையில், இன்று (செப்.14) முதல் நெய் மற்றும் வெண்ணெய் விலையை உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, 15 மில்லி நெய் பாக்கெட் ரூ.14-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு ரூபாய் உயர்த்தி ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 100 மில்லி பாக்கெட் ரூ.70-ல் இருந்து ரூ.80-ஆகவும், 500 மில்லி லிட்டர் பாட்டில் ரூ.315-ல் இருந்து ரூ.365-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆவின் நெய் ஒரு லிட்டர் பாக்கெட் 620 ரூபாயிலிருந்து 690 ரூபாயாகவும், ஜார் 630 ரூபாயிலிருந்து 700 ரூபாயாகவும் என, ஒரு லிட்டருக்கு 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.மேலும், வெண்ணெய் 100 கிராம் 55 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும், சமையல் வெண்ணெய் 500 கிராம் 260 ரூபாயிலிருந்து 275 ரூபாயாகவும், உப்பு வெண்ணெய் 500 கிராம் 275 ரூபாயிலிருந்து 280 ரூபாயாகவும் என ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து ஆவின் நிறுவனம் சார்பில் அனுப்பட்ட சுற்று அறிக்கையில் தெரிவிக்கபட்ட்டுள்ளது. தமிழக அரசின் ஒரு துறையாக ஆவின் நிர்வாகம் நாளொன்றுக்கு சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. இத்தகைய நிலையில் ஆவின் வெண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றின் அடுத்தடுத்து விலை உயர்த்தப்பட்ட செய்தி சாமானிய மக்களிடைய பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
மேலும், நெய் விற்பனை விலையானது கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 20 ரூபாய், ஜூலை மாதத்தில் 45 ரூபாய், டிசம்பர் மாதத்தில் 50 ரூபாய் என்று லிட்டருக்கு 115 ரூபாய் வரை 2022ம் ஆண்டில் 9 மாதங்களில் மட்டும் மூன்று முறை உயர்ந்தது.இந்த நிலையில் தற்போது நான்காவது முறையாக நெய் விற்பனை விலையை உயர்ந்து உள்ளது. மேலும் இனி எதிர் வரும் நாட்கள் எல்லாம் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை தினங்களாக இருக்கிறது. இதனால் சாமானிய மக்கள் இடைய இந்த விலை ஏற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று பல்வேறு தரப்பில் இருந்து விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு... தெற்கு ரயில்வே வெளியிட்ட ஹாட் நியூஸ்!