கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக தமிழ்நாட்டில் ஆயிரத்து 200க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 12 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்த அசாதாரண சூழ்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கான பொதுமக்களின் பங்களிப்பாக ரூ. 100 முதல் நிவாரண நிதியாக கொடுத்து உதவுகின்ற உள்ளங்களை ஊக்குவிக்கின்ற வகையில், வாய்ப்புகளை உருவாக்கி தந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர்.
கரோனா நிவாரண நிதிக்காக தாம் சேமித்து வைத்திருந்த தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்து இந்த சிறு வயதிலேயே சேமிக்கும் பழக்கமும், நாட்டிற்கு உதவும் எண்ணமும் கொண்ட விசாக் என்ற தம்பிக்கு தனது அன்பார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையிலும் சமூக வலைதளங்களில் ஒரு சிலர் தங்களது தவறான கருத்துகளை வெளியிட்டு வருவதால், உண்மையாக உதவி வருகின்ற உள்ளங்களுக்கு வருத்தம் அளிப்பதாக அமைந்துள்ளது. கரோனா தடுப்பு நிவாரண பணிகளை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் 12 காண்காணிப்புக் குழுவை அமைத்தார். இதன் மூலம் தற்போது 2,500 தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், 58 ஆயிரம் தன்னார்வலர்களும் அக்குழுக்களோடு இணைந்து பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகின்றனர்.
சுனாமி, நிலநடுக்கம், பெருவெள்ளம், நிலச்சரிவு, வர்தா, ஒக்கி, கஜா போன்ற இயற்கை பேரிடரின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணகளை வழங்கி, ஒட்டு மொத்த பாராட்டுகளை பெற்ற பண்பாளர்களை போல், இந்த கோவிட் - 19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வருபவர்களையும் பாதுக்காக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், உயர்தர மருத்துவக் குழுவினர்கள் வழங்கிய அறிவுரைகளின் அடிப்படையில், அவர்களுக்கான அனைத்து வாய்ப்புகளையும் நமது முதலமைச்சர் உருவாக்கிவருகிறார்.
ஆனால், இதை ஒருசிலர் தங்ளது உள்நோக்கங்களுக்காக, சமூக வளைதளங்களில் தவறான புரிதல்களை பொது மக்களிடம் கொண்டுச் செல்வது மனித சமூதாயத்திற்கு செய்யும் மாபெரும் பிழையாகும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒவ்வொரு நபரையும், ஒவ்வொரு குடும்பத்தினரையும் பாதுகாப்பது தான் என் தலையாய பணி என்று பாடுபடும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு, நாம் அனைவரும் கருத்து வேறுபாடின்றி ஒத்துழைக்கவேண்டும்.
“விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு” என்ற தாரக மந்திரத்தை கடைபிடித்து கரோனா வைரஸ் கோவிட் - 19 பெருந்தொற்றிலிருந்து நம்மை பாதுகாப்போம்! இது மனித குலத்திற்கு நாம் செய்யும் மகத்தான சேவையாகும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'கரோனா தடுப்பில் பிரதமரின் சூத்திரத்தை மக்கள் பின்பற்ற வேண்டும்'