சென்னை: தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறும் போது, ”அண்டை மாநிலங்களில் கள் இறக்கப்படும் நிலையில் தமிழ்நாட்டில் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கள்ளில் கலப்படம் செய்யப்படுவதை தடுக்காமல் கள்ளுக்கு தடை விதித்தது தவறு. மேலும் கலப்படத்தை தடுக்காத தமிழ்நாடு அரசு ஆளுமை இல்லாத அரசாக உள்ளது. கள் இறக்குவது தொடர்பான தடையை நீக்க வேண்டும், கள்ளை உணவு பட்டியலில் இணைத்து சட்டம் இயற்ற வலியுறுத்தி ஜனவரி 21 முதல் வாய்ப்புள்ள இடங்களில் கள் இறக்கி சந்தை படுத்தும் உரிமை மீட்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
தமிழ்நாட்டில் அரசியலமைப்பு சட்டம் 47க்கு எதிராக கடந்த 35 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. கள் இறக்கி அதனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அரசிற்கு வருவாய் அதிகரிக்கும். தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை தான் விற்பனை செய்ய கூடாது. கள் அளவாக சாப்பிட்டால் உணவாகவே பயன்படுத்த முடியும். மது அருந்துபவர்களின் கல்லீரல் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு ஒரு மரத்து கள் மட்டும் அளித்தால், 48 நாட்களில் நோய் குணமாகும்.
நாம் உண்ணும் உணவினை புளிக்க வைத்தால் ஆல்ஹகால் வரும். அதனை நாம் உண்கிறோம். கள் போதைப் பொருள் என்பதை நிருப்பித்தால் 10 கோடி பரிசுத் தரப்படும் என கூறினோம். ஆனால் யாரும் அதனை நிருபிக்கவில்லை. அரசியல் கட்சியினர் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆல்ஹகால் ஒரு சொட்டுக் கூட இருக்காது என கூறுகின்றனர். அது நடைபெறாது.
முன்னர் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் உடல்நிலை சரியில்லாத போது கள்ளுக்கு தடை செய்ய யாரோ 35 ஆண்டுகளுக்கு முன் அவரிடம் தவறாக கையொப்பம் பெற்றனர். எம்ஜிஆர் கள்ளுக்கு ஆதரவாகத்தான் இருந்தாா்.
கள்ளுக்கு கடைகளை ஏலம் விட வேண்டாம். பசு உள்ளவர்கள் பால் விற்பது போல நாங்களே கள் இறக்கி விற்றுக் கொள்கிறோம் .
என்எல்சி நிர்வாகம் விளை நிலங்களில் சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டது ஏற்க முடியாது. அறுவடை காலம் வரை காத்திருக்க வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் பயிர் வைக்க அனுமதித்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
தக்காளி விலை உயர்விற்கு அரசின் தவறான அனுகுமுறையே காரணம். அதிகாரிகள் விளை பொருள் தேவையை உணர்ந்து விவசாயிகளை வைத்து உற்பத்தி செய்ய வேண்டும். காவேரி நீர் திறப்பு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தினந்தோறும் நீர் பங்கீடு முறை குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும் .
நொய்டாவில் கட்டப்பட்ட இரட்டை கோபுரத்தை விதியை மீறி கட்டப்பட்டதாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் உடைத்தது போல், கர்நாடக அரசு தமிழ்நாட்டின் அனுமதியை பெறாமல் கட்டிய அணைகளையும் வெடி வைத்து தகர்க்க வேண்டும். காவேரியில் திறந்து விடப்படும் தண்ணீர் நேரடியாக மேட்டூர் அணைக்கு வரும் வகையில் செய்ய வேண்டும். காவேரி நடுவர்மன்றம் தண்ணீர் திறந்து விடுவதை தினமும் செய்யும் போது கடைமடைக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பட்டியலின நிதியை மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு மடைமாற்றம் செய்வது கண்டிக்கத்தக்கது - அண்ணாமலை