இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் வந்த காலகட்டத்தில் தன்னார்வலர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆனால் தற்பொழுது கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதால் உதவி செய்யும் தன்னார்வலர்கள் மூலமாக வைரஸ் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு உதவி செய்ய முன்வரும் தன்னார்வலர்கள் அரசுடன் இணைந்து உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன், சமூக இடைவெளியைப் பின்பற்றி பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளோடு, அரசுடன் இணைந்து நிவாரண உதவிகள் வழங்க உத்தரவிடப்பட்டதே தவிர தன்னார்வலர்கள் உதவி செய்யத் தடை விதிக்கப்படவில்லை.
நேற்று (ஏப்ரல் 12) அரசு வெளியிட்ட அறிவிப்பு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே 2,500 நிறுவனங்கள், 58,000 தன்னார்வலர்கள் அரசுடன் இணைந்து சமூகப் பாதுகாப்பு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
உதவி செய்ய முன்வரும் தன்னார்வலர்கள் Stopcorona.in என்ற இணையதளத்தில், தங்களைப் பதிவு செய்து கொண்டு மாவட்ட ஆட்சியர், அந்தந்த மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படலாம். தன்னார்வலர்கள் வழங்கும் சமைத்த உணவு, மளிகை சாமான்கள், காய்கறிகள் உள்ளிட்டவை அவர்கள் விரும்பும் பகுதி, விரும்பும் நபர்களுக்கு விநியோகிக்கப்படும்" என்று தமிழ்நாடு அறிவுறுத்தியுள்ளது.
நேற்று (ஏப்ரல் 12) தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழக அரசு இந்த விளக்கத்தைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'கரோனா பரிசோதனைக் கருவிகளைப் பறித்தது தமிழின விரோதப் போக்கின் உச்சம்' - சீமான் கொந்தளிப்பு