சென்னை : சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில், வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 8 செ.மீ மழை பெய்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது தமிழகம், தெற்கு ஆந்திரக் கடற்கரைக்கு அப்பால் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 4 தினங்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்கள், புதுவை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழையும் பெய்யக் கூடும்.
இதையும் படிங்க : சென்னை மழை: மக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை - உதயநிதி ஸ்டாலின்
13.11.24 : சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
14.11.24 : வட கடலோர மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
15.11.24 : தென் தமிழக கடலோர பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா, தென் மேற்கு வங்கக்கடல், தமிழக கடற்கரை, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35-45 கிமீ வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்.
தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக் 1 முதல் இன்று வரையிலான கால அளவில் 256 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த காலகட்டத்தின் இயல்பான அளவு 259 மி.மீ. இது இயல்பைவிட ஒரு சதவீதம் குறைவு. மழைப்பொழிவைப் பொறுத்தவரை இதே சூழல்தான் சென்னையில் நீடிக்கும். கனமழை விட்டுவிட்டு பெய்யும்.
வங்கக் கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பு இல்லை. மெதுவாக கடந்து கரையைக் கடக்கும். வானிலை துல்லியத் தன்மை உடன் கணிப்பு என்பது இல்லை. வானிலை என்பது தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்