மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் மனைவி சிவரஞ்சனி கடந்த 2 ஆம் தேதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது சிவரஞ்சனி வலியால் துடித்ததாகவும், அறுவை சிகிச்சை செய்ய உறவினர்கள் வலியுறுத்தியும் அதனை மருத்துவர்கள் ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
உறவினர்கள் போராட்டம்: இந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி பேச்சு மூச்சு இன்றி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, சிகிச்சை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
"உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாமல் தாமதப்படுத்தியதால்தான் குழந்தை இறந்ததாக" குற்றம் சாட்டிய உறவினர்கள், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை அரசு மருத்துவமனை எதிரே குழந்தையின் சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மருத்துவர் பணியிடை நீக்கம்: இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பானுமதி, இறந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பிரசவம் பார்த்த மருத்துவர் ரம்யாவை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும் போராட்டத்தை கைவிடுமாறு உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் மருத்துவரைக் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்: இச்சம்பவம் மருத்துவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துதுவர்கள் சங்கம் சார்பில் மருத்துவர்களிடம் உரிய விசாரணை செய்யாமல், பெற்றோர்கள் உறவினர்களிடம் விசாரணை செய்ததன் அடிப்படையில் மருத்துவர் ரம்யா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு சிகிச்சையை மட்டும் புறக்கணித்து மருத்துவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
21 மருத்துவர்கள் பணியில் உள்ள நிலையில், இம்மருத்துவமனையில் உள்ள அனைத்து அவசர சிகிச்சை பிரிவுகளும் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவர்களின் போராட்டம் காரணமாக புறநோயாளிகள் பிறகு இங்கு செயல்படவில்லை என்றும் தெரிகிறது.
இதையும் படிங்க: கல்லூரி மாணவிக்கு ஆபாச மிரட்டல்... மகனுக்கு தந்தையே உடந்தை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!
சஸ்பெண்ட் திரும்ப பெற வேண்டும்: இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர் பிரபா கூறுகையில்,"கடந்த அக்டோபர் மாதம் மட்டும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 525 பிரசவங்கள் நடந்துள்ளன. இதில் 299 அறுவை சிகிச்சையும், 226 சுகப் பிரசவமும் நடைபெற்றுள்ளன.
ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் எங்களுக்கு எந்த விதமான பிரச்சனையும் கிடையாது. ஆனால் முதல் முறை சுகப்பிரசவம் என்பதால்தான், இரண்டாவது முறையும் அதற்காக மருத்துவர்கள் அனுமதித்துள்ளனர். எதிர்பாராத விதமாகக் குழந்தைக்கு மூச்சுத் திணறல் (Birth Asphyxia) ஏற்பட்டுவிட்டது.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தித் தவறு ஏதேனும் நடந்திருந்தால் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பதற்காக மருத்துவர் மீது இதுபோன்ற நடவடிக்கை எடுப்பது தவறான முன்னுதாரணமாகும். இதனால் வருங்காலங்களில் சுகப்பிரசவம் மேற்கொள்ள மகப்பேறு மருத்துவர்கள் தயங்குவார்கள். ஏற்கனவே தமிழகம் முழுவதும் மகப்பேறு மருத்துவர்கள் பற்றக்குறையாக உள்ளனர்" என்றார் மருத்துவர் பிரபா.
தொடர்ந்து பேசிய அவர், "மருத்துவர் ரம்யாவின் பணியிடைநீக்கம் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒருநாள் புறநேயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மருத்துவரின் பணியிடை நீக்கம் ஆணையை திரும்பப்பெறாவிட்டால் மாநிலம் மற்றும் மாவட்ட சங்கங்கள் அவசர கூட்டங்கள் நடத்தி அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
இதேபோல் இந்த விவகாரத்திற்குத் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.