சென்னை: சமூக வலைத்தளங்களில் வாயிலாக நடக்கும் குற்ற சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் கேட்பதில் தொடங்கி, அதிகாரிகளை போல காட்டிக்கொண்டு சைபர் அர்ரெஸ்ட் என்ற பெயரில் கோடி கணக்கில் மோசடி செய்யும் சம்பவங்கள் வரை சைபர் குற்றங்கள் தீவிர வளர்ச்சி அடைந்துள்ளன.
குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் முன்பின் அறிமுகமாகாத நபர்களிடம் பேசி, பழகி நாளடைவில் மோசடி வலையில் சிக்கி இளம் பருவத்தினர் பலர் பெரும் துன்பத்துக்கு ஆளாகின்றனர். அந்த வகையில், சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய கல்லூரி மாணவி ஆபாச மோசடியில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காவல் நிலையத்திலேயே கத்தி குத்து.. தங்கையின் கணவர் மீது இளைஞர் வெறிச்செயல்.. ஆவடியில் பரபரப்பு..!
மும்பையைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவி சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு விடுமுறை நாட்களில் வந்து சென்றார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் நண்பராகிய சுஜித் என்ற இளைஞர், அப்பெண்ணின் ஆபாச படங்களை பெற்றுக்கொண்டு மிரட்டி வந்துள்ளார். மிரட்டலுக்கு பயந்து சுஜித்திற்கு அவ்வப்போது அப்பெண் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பியுள்ளார். சமீபத்தில் ரூபாய் 50 ஆயிரம் கேட்டு சுஜித் மிரட்டிய நிலையில், பாதிக்கப்பட்ட பெண் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார் இளம்பெண் மிரட்டப்பட்டது உண்மை என கண்டறிந்தனர். இதையடுத்து கன்னியாகுமரி விரைந்த தனிப்படை போலீஸார், விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த சுஜித் (27) என்ற இளைஞரை கைது செய்தனர். அத்துடன் சுஜித்துக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை வின்செண்ட் (55) என்பவரும் கைது செய்யப்பட்டார்.
அவர்களிடமிருந்து மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்