சென்னை: அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, அரசு வழக்கறிஞர்கள் காவல் துறையினரிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதத்தில், அரசு குற்றவியல் வழக்கறிஞர்களின் அலுவலகங்களுக்கு வரும் காவல் துறையினரை, சில வழக்கறிஞர்கள் ஒருமையில் பேசுவதாகவும், கண்ணியக் குறைவாக நடத்துவதாகவும் வரும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சிலரின் நடவடிக்கையால் ஒட்டு மொத்த அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் மீதும் அவப்பெயர் ஏற்படுவதாக சுட்டிக் காட்டியுள்ள ஜின்னா, நாட்டின் அரணாக விளங்கும் ராணுவ வீரர்களைப்போல் பொதுமக்களுக்கு அரணாக விளங்கும் காவல் துறையினருக்கு உரிய மரியாதை தருவது நமது கடமை என குறிப்பிட்டுள்ளார்.
காவல் துறையினரை அமர வைத்து, தேவையான வழக்கு விவரங்களைப் பெற வேண்டும் என்றும், அந்த விவரங்கள் போதுமானதாக இல்லையெனில், உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய விவரங்களை பெற வேண்டும் என்றும் கடிதத்தில் அறிவுறுத்தி உள்ளார்.
காவல் துறையினருக்கும் நம்மைப் போன்றே பணிச்சுமைகள் மற்றும் மன உளைச்சல்கள் இருக்கும் என்பதை மனதில் கொண்டு, மனித நேயத்தோடு நடத்த வேண்டும் எனவும், புலன் விசாரனையில் தவறு செய்திருந்தால் மரியாதை குறைவாக நடத்துவதோ அல்லது ஒருமையில் பேசுவதோ தீர்வாகாது என அறிவுறுத்தி உள்ளார்.
காவல் துறையினர் தவறு செய்திருந்தால், அடுத்த உயர் அதிகாரி அல்லது மாவட்ட எஸ்.பி அல்லது துணை ஆணையருக்கு தெரியப்படுத்தவும் ஆலோசனை வழங்கி உள்ளார். காவல் துறையினர் அளிக்கும் விவரங்களின் அடிப்படையில்தான் அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் உரிய வாதங்களை முன்வைக்க முடியும் என்பதால், அதற்குரிய வழக்கு விவரங்களை வழங்க வருகிற காவல் துறையினரை பெரிய பதவி வகிப்பவர்கள், சிறிய பதவி வகிப்பவர்கள் என பாகுபாடு பார்க்காமல் சக மனிதராக பாவித்து, கண்ணியத்தோடு நடத்த வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடிதத்தில் உள்ள கருத்துகளை அறிவுறுத்தல்களாக கருதாமல், அரசு குற்றவியல் வழக்கறிஞர் என்கிற உன்னத துறையை மேலும் மேன்மைப்படுத்த கிடைத்த வாய்ப்பாக வழக்கறிஞர்கள் கருதுவீர்கள் எனவும், அசன் முகமது ஜின்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தீபாவளியையொட்டி தமிழகத்தில் ரூ.467 கோடிக்கு மது விற்பனை - டாஸ்மாக் நிர்வாகம் தகவல்!