தமிழ்நாட்டில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்ஸின் மற்றும் கோவிஷூல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவின் இணையதளத்தில் பதிவு செய்யாதவர்களும் ஆதார் அடையாள அட்டை எடுத்துச் சென்றால் பதிவு செய்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கரோனா தொற்றின் 2ஆவது அலை மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அனைத்துத் தரப்பினரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். மாற்றுத்திறனாளிகள் தாங்கள் தடுப்பூசி போடுவதற்குத் தேவையான சிறப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என அரசிற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழ்நாடு அரசு, மாற்றுத் திறனாளிகள் எந்தவித சிரமுமில்லாமல் தடுப்பூசி பெறுவதற்கான பின்வரும் சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறுவதற்குத் தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட வேண்டும். அனைத்து தடுப்பூசி மையங்களிலும் பொது வரிசை அல்லாது மாற்றுத் திறனாளிகளுக்கான தனி வரிசை ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுத் தளம் அமைக்கப்பட வேண்டும். தேவைக்கேற்ப மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்து செயல்படுத்தப்பட வேண்டும்' என அரசு அறிவுறுத்தி உள்ளது.
அதனைத் தொடர்ந்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 'மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி போடுவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்ட கணவனுக்கு நீதி கேட்ட நவீன கண்ணகி