தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான 2020-22ஆம் ஆண்டிற்கான தேர்தல் நவம்பர் 22ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆயிரத்து 50 வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் தலைவருக்கான வாக்குகளில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 557 வாக்குகள், டி. ராஜேந்தர் 388 வாக்குகள், பி.எல். தேனப்பன் 88 வாக்குகள் பெற்றனர். 17 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றிபெற்றார்.
துணைத் தலைவர்களாக சுயேச்சையாகப் போட்டியிட்ட கதிரேசன், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அணியைச் சேர்ந்த ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் வெற்றிபெற்றனர். பொருளாளராக முரளி அணியைச் சேர்ந்த சந்திர பிரகாஷ் ஜெயின் வெற்றிபெற்றார். செயலாளர் பதவிக்கு முரளி அணியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனும், டி.ஆர். அணியைச் சேர்ந்த மன்னனும் வெற்றிபெற்றனர்.
இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்திற்குப் புதியதாகத் தேர்வுசெய்யப்பட்ட நிர்வாகிகளின் பதவியேற்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.