சென்னை: சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் 1000 படுக்கைகளுடன் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையின் பணிகள் முடிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அழைப்பு விடுப்பதற்கு நேற்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி செல்ல பயணிக்க தயாரானார்.
இரவு 8:20 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனைச் சரி செய்யும் பணியில் விமான நிலைய ஊழியர்கள்,பொறியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி செல்லும் பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னை விமான நிலையத்திலிருந்து மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
மீண்டும் இன்று காலையில் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் டிஜிட்டல் நுண்ணறிவு மற்றும் ஹார்டுவேர் மையம் துவக்கம்