சென்னை: தி.மு.க. இளைஞர் அணியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட, மாநில மற்றும் மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் இன்று (ஜூலை 29) சென்னை அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் அரங்கில் திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் இக்கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிர்வாகிகள் மத்திய பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "எனக்கு வயது 70, ஆனால் 20 வயதாக உணர்கிறேன். சொந்த வீட்டிற்கு வந்ததை போல் நான் கருதுகிறேன். கட்சி பணியையும் ஆட்சி பணியையும் சிறப்பாக செயல்படுத்தி நல்ல பெயரை வாங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். உதயநிதியைப் பார்க்கும் போது நான் நிம்மதி அடைகிறேன். பிறந்த பலனை அடைகிறேன். இளைஞரணியில் புதிதாகச் சேர்ந்தவர்களுக்கு உதயநிதியே உதாரணம். மேலும் கடந்த தேர்தலில் உதயநிதி காட்டிய ஒற்றை செங்கல்லை எதிர்க்கட்சிகள் மறக்கவில்லை" என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், திராவிட மாடல் குறித்து திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா தொகுத்து 20 புத்தகங்களாக வழங்கியுள்ளதை மீண்டும் மீண்டும் படிக்குமாறும், தான் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்ததால் பெருமையடையவில்லை என்றும், மக்களுக்கு நல்லது செய்வதால் தான் பெருமையடைவதாகவும். அண்ணா, கருணாநிதி உட்கார்ந்த முதல்வர் நாற்காலியில் தான் உட்காருவதாகக் கனவிலும் நினைத்ததில்லை என்றும் கூறினார்.
மேலும் "அரசியல் எதிரிகளைச் சலவை செய்யும் இயந்திரமாக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. அமலாக்கத் துறை இயக்குநராக மிஸ்ராவை தவிர வேறு அதிகாரிகளே இல்லையா?. இதைத்தான் உச்சநீதிமன்ற நீதிபதியும் கேட்டார். குற்ற பின்னணி உள்ளவர்கள்தான் பாஜக அரசின் அமைச்சரவையில் உள்ளனர். குற்ற வழக்குகள் கொண்ட பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து பிரதமரிடம் கேட்க அமித்ஷாவிற்குத் தைரியம் உண்டா?.
பாட்னா, பெங்களூரு கூட்டங்கள் வெற்றிபெற்றதைப் பிரதமரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்தியாவைக் காப்பாற்ற இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே நமது தேர்தல் முழக்கம். அமித்ஷா தொடங்கி வைத்தது 'பாத யாத்திரை அல்ல, அது பாவ யாத்திரை'. தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தவே பாதயாத்திரை நடத்தப்படுகிறது. அவர்கள் மணிப்பூருக்குச் சென்று ஏன் அமைதி யாத்திரையைத் தொடங்கி வைக்கவில்லை?" என்ற கேள்விகளை எழுப்பினார்.
மேலும் எதிரிகள் எடுக்கும் ஆயுதத்தை நாமும் எடுக்க வேண்டும். நல்லதை செய்யவிடாமல் திசை திருப்புவோரின் சதிகளில் நாம் சிக்க வேண்டாம். பதவிகளுக்காக இல்லாமல் கொள்கைகளுக்காக நாம் உழைக்க வேண்டும்" என இளைஞரணி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான அரசு அமைக்க உறுதுணையாக இருக்க வேண்டும் - வைகோ