சென்னை: தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சோழர்கால கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் இருப்பதை கண்டறிந்து உள்ள சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதை மீட்டு மீண்டும் தமிழகத்துக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தமிழக கோயில்களில் உள்ள விலைமதிக்க முடியாத பழங்கால சிலைகள் அமெரிக்கா உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டது.
பழங்கால சிலைகளை கடத்தி அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணத்துக்கு விற்றதாக சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சுபாஷ் கபூர் தற்போது தமிழக சிறையில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
அவரால் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்ட சிலைகள் உள்பட ஏராளமான சிலைகள் தற்போது வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டு தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டு திருடப்பட்ட இடத்திலேயே நிறுவப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுபாஷ் கபூரால் தமிழக கோயில் ஒன்றில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட சோழர் காலத்தை சேர்ந்த கலிய கல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணரின் (பாம்பின் மேல் நடனமாடும் கிருஷ்ணர்) உலோகச் சிலை, தற்போது அமெரிக்காவில் உள்ள கலைக் கூடம் ஒன்றில் இருப்பதை தமிழக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.
இந்த சிலை காளிங்கன் என்ற 5 தலை பாம்பின் மேல் கிருஷ்ணர் நடனமாடுவதை போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2005ஆம்ஆண்டு சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால் கடத்தி செல்லப்பட்டு, ஏறத்தாழ 5 கோடியே 20 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சோழர் காலமான 11 - 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிலையை போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சிலை தமிழ்நாட்டில் உள்ள எந்த கோயிலில் திருடப்பட்டது என்பதை கண்டுபிடிக்கும்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி சைலேஷ்குமார் யாதவ், ஐஜிதினகரன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி, ஆய்வாளர் காவேரியம்மாள் விசாரணை மேற்கொண்டுள்ளார். விலை மதிப்புமிக்க இந்த நடனமாடும் கிருஷ்ணர் சிலையை அமெரிக்காவில் இருந்து தமிழ்நாட்டுக்கு மீட்டுக் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : சேலம் அருகே நின்றிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து: 6 பேர் பலி; பதைபதைக்கும் வீடியோ!