சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்குச் செல்லும் மழைநீர் கால்வாய் மற்றும் சதுப்பு நிலத்தை ஒட்டி அமைந்துள்ள சாய்பாலாஜி நகர் பகுதிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பார்வையிட்டார். மேலும், பள்ளிக்கரணைப் பகுதியில் மழைநீர் தேங்குவதற்கு காரணமாக, இருப்பதாக கூறப்படும் நாராயணபுரம் ஏரியையும், போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளனவா எனப் பள்ளிக்கரணை ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, “சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு தேசிய மீட்பு பேரிடர் குழு ஆலோசகர் குனால் சத்யமூர்த்தி தலைமையில் மத்தியக்குழு நாளை(டிச.11) வருகை தர இருக்கிறார்கள்.
இந்த குழுவில் வேளாண்மை, நெடுஞ்சாலை, மின்சாரம் உள்ளிட்ட துறை சார்ந்தோர் இடம் பெற்றிருப்பர். சென்னையில் குடிநீர் வசதி மற்றும் பால் விநியோகம், மின் இணைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் ஆகியவை சரியாகி விட்டன.
சந்தைகளும் திறக்கப்பட்டு அடிப்படைத் தேவைகளான அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டன. கடந்த 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னை மாநகரம் விரிவுபடுத்தப்பட்டது. சென்னை தி.நகர் பகுதியில் கால்வாய் பணி காரணமாக தண்ணீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள நிவாரணம் வழங்கப்படும் முறை குறித்தும், யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்பது குறித்தும் நாளை(டிச.11) அரசாணை வெளியாகும். ஆறுகளும், கடலும், நீரை உள்வாங்காததால் வெள்ளநீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் போர்க்கால அடிப்படையில், குப்பைகளை அகற்றும் பணிகள் மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளை(டிச.11) முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும். ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: மயிலாடுதுறை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைப்பு..!