சென்னை: தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில், சுமார் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 767 சதுர அடி பரப்பளவில் தரை, ஆறு தளங்களுடன் 39 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி இன்று (செப். 19) காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார்.
மேலும், நபார்டு கடனுதவி திட்டத்தின்கீழ் கோவை மாவட்டம் - கோமங்கலம்புதூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் - பெரியசெவலை, தேனி மாவட்டம் - பெரியகுளம், திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு, விழுப்புரம் மாவட்டம் பனமலைப்பேட்டை ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஐந்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தலா ஒன்பது கோடியே 70 லட்சத்து ஏழாயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்களையும் அவர் திறந்துவைத்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக பள்ளிக் கல்வி இயக்ககத்தின் அமைச்சுப் பணிக்கு 635 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக ஏழு பேருக்கு முதலமைச்சர் பழனிசாமி பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, தலைமைச் செயலர் க. சண்முகம், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் தீரஜ் குமார், பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் முனைவர் ச. கண்ணப்பன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ரூ.55 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் திறந்து வைப்பு!