தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் வேளாண்மைப் பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 10 கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்துவைத்தார்.
மேலும், திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 78 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள உணவுப் பூங்காவிற்கும் அடிக்கல் நாட்டினார். சென்னை, நந்தனம், வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் 8 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையக் கட்டடம்.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், தோட்டக்கலை வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய ஏதுவாகவும், தோட்டக்கலை தொடர்பான தகவல்களை விவசாயிகளிடம் பகிர்ந்து அவர்கள் பயன்பெறும் வகையிலும், 3,704 சதுர அடி கட்டட பரப்பளவில், 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் , கட்டப்பட்டுள்ள மாவட்ட தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சி மையம்.
மேலும், சென்னை மாவட்ட மக்களுக்கு வீட்டுக் காய்கறி தோட்டம் அமைப்பதற்காக காய்கறி விதைகள், நுண்ணுயிர் உரங்கள் அடங்கிய காய்கறி தளைகள், அழகு தொட்டிச் செடிகள், இயற்கை உரங்கள், மதிப்பு கூட்டப்பட்ட தோட்டக்கலை பொருட்கள் போன்றவற்றை பொது மக்களுக்கு வழங்கிடும் வகையில் திருவான்மியூரில், 3,720 சதுர அடி கட்டடப் பரப்பளவில், 99 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தோட்டக்கலை கிடங்கு; என மொத்தம் 10 கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான வேளாண்மைத் துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்துவைத்தார்.
பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து பயிரிடும் விவசாயிகளை ஊக்குவித்திடும் விதமாக, பாரம்பரிய முறையில் சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்று மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெறும் விவசாயிகளுக்கு “ பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது ” வழங்கப்படுகிறது. மேலும், இவ்விருது பெறும் விருதாளர்களுக்கு முறையே ஒரு லட்சம் ரூபாய் , 75 ஆயிரம் ரூபாய் மற்றும் 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், 2019-2020ஆம் ஆண்டிற்கான பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருதிற்கான முதல் பரிசினை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த என். சக்திபிரகதீஷ் என்பவருக்கும், இரண்டாம் பரிசினை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ் . வேல்முருகன் என்பவருக்கும், மூன்றாம் பரிசினை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த உ. சிவராமன், ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 123 சர்வ சமய இணையருக்கு சீர்வரிசையுடன் திருமணம்