சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டம், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை, ஆளுநரைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான பணிகளை அரசு துரிதப்படுத்தியுள்ள நிலையில், சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் ஜூலை 20-ஆம் தேதி முதல் இந்த திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ணப்பம் தொடங்கப்பட்டு வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டு வருகின்றன. டோக்கன் அடிப்படையில் தகுதியுடைய குடும்ப அட்டைத்தாரர்கள் ரேஷன் கடைக்கு வந்து விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிங்க: காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு எப்போது? - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் விளக்கம்!
கடந்த ஒரு மாத காலத்தில் இரண்டு அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். தற்போது புழல் சிறையில் இருப்பதால் இலாகா இல்லாத அமைச்சராகச் செந்தில் பாலாஜி தொடரலமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: 'மின் இணைப்புகளில் பெயர் மாற்ற சிறப்பு முகாம்'; மின்சார வாரியம் அறிவிப்பு
அதேபோல், தமிழக அரசின் கொள்கைக்கும், கோட்பாட்டிற்கும் எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோருவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்கின்றனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை திரும்பப் பெறக்கோரி முழக்கம் எழுப்ப திட்டமிட்டுள்ளனர். மேலும், ஆளுநரை திரும்ப பெறும் விவகாரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று ஆலோசனை செய்ய வாய்ப்புள்ளது.
மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்தும், ஜனவரியில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய முதலீட்டு ஒப்பந்தங்களுக்கான ஒப்புதல் குறித்தும் சட்டப்பேரவையில் துறை வாரியாக அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்தும் இன்று அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.