சென்னை: தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை முழுவதும் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஐந்து மின் மோட்டர்கள் மூலம் ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றி வருகின்றனர்.
மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இதனால் தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.
இந்நிலையில் தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளதால் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கபட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மேற்கு தாம்பரம் செல்வதற்கு இரண்டு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியநிலை உள்ளதால் அவதியடைந்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் மழை நீர் தேங்கிய சுரங்கப் பாதையை பார்வையிட்டு உடனடியாக ஐந்து மின் மோட்டர்கள் மூலம் மழை நீரை வெளியேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 22 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, இதுவரை, 282 குடும்பங்களைச் சார்ந்த 860 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நிரம்பி மறுகால் போன போளிவாக்கம் ஏரி; திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் இடையே போக்குவரத்து பாதிப்பு