செங்கல்பட்டு: பெற்ற தாயை யார் கவனித்துக் கொள்வது என்று எழுந்த போட்டியால் 90 வயதான தாயை தூத்துக்குடியிலிருந்து தாம்பரம் வரை அழைத்து வந்து விட்டுச் சென்ற சம்பவம் நடந்தேறியுள்ளது. தவழும் வயதில் தவறிக்கூட விழுந்துவிடக் கூடாது என்று ஒவ்வொரு நிமிடமும் பாசத்தை ஊட்டி வளர்த்த தாயை, இவ்வாறு பெற்ற மகனே தவிக்கவிட்டு சென்ற சம்பவம் காண்போரின் கண்களில் கண்ணீரை வரவைத்து உள்ளது.
பெற்ற தாயை யார் பார்த்து கொள்வது என்ற அண்ணன் - தம்பி இடையே ஏற்பட்ட தகராறில் மூதாட்டியை மூத்த மகன் பரிதவிக்க விட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 18ஆம் தேதி) காலை 6.30 மணி அளவில் தென்மாவட்டத்தில் இருந்து ரயிலில் வந்த 90 வயது மூதாட்டி ஒருவர், தனது மகனுடன் இறங்கியுள்ளார். அவரது மகன், அந்த மூதாட்டியை அங்குள்ள பிளாட்பாரத்தில் உள்ள இருக்கையில் அமர வைத்து விட்டுச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் காணவில்லை. இதனால், பதற்றமடைந்த அந்த மூதாட்டி கண்ணீருடன் பரிதவித்து கொண்டதோடு, நீண்ட நேரமாக அழுது கொண்டிருந்துள்ளார்.
பின்பு இதைப் பார்த்த மற்ற பயணிகள், அவரை 'ஏன் நீண்ட நேரமாக இங்கே இருந்து கொண்டிருக்கிறீர்கள்' என்று கேட்டு உள்ளனர். அதற்கு பதிலளித்த மூதாட்டி, 'எனது பெயர் முத்து காமாட்சி(90) என்றும் நான் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து தனது மூத்த மகன் காமராஜனுடன் ரயிலில் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்னர், தன்னை இங்கே உட்கார வைத்து விட்டு, இதோ வருகிறேன் என்று சென்ற எனது மகன் நீண்ட நேரமாகியும் காணவில்லை என்று கண்கலங்கியபடி கூறியுள்ளார்.
இதனை அடுத்து சக பயணிகள் மூதாட்டியின் இந்த நிலைமை குறித்து ரயில்வே பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மூதாட்டி வைத்திருந்த மஞ்சள் பையை சோதனை செய்தபோது, அதற்குள் ஒரு காகிதத்தில் அவரது இளைய மகன் கணேசனின் கைபேசி எண் இருந்தது கண்டறியப்பட்டது. அதனைக் கொண்டு அவரிடம் தொடர்புகொண்டு பேசிய ரயில்வே போலீசார் அவரை தாம்பரம் ரயில் நிலையம் வரவழைத்தனர்.
இது குறித்த விசாரணையில், பெற்ற தாயை யார் பார்த்து கொள்வது என்ற போட்டியில் தனது அண்ணன் இது போன்ற செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து மூதாட்டியை அவரிடம் ஒப்படைத்து பத்திரமாக வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூறிய ரயில்வே போலீசார், அடுத்தமுறை இப்படி எதேனும் செயலில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: Police rescue child missed by elder people: முதியவர்கள் தவறவிட்ட பேரக்குழந்தையை மீட்டு ஒப்படைத்த காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு!