சென்னை: தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கத்தினர் சென்னை தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவி கணேசனை சந்தித்து ஒரு விழுக்காடு சரக்கு-சேவை வரியை தையல் நல வாரியத்திற்கு ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்தனர்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தையல் தொழிலாளர் முன்னேற்றச் சங்க நிர்வாகி ராஜேந்திரன், "தையல் தொழிலாளர்கள் நல வாரியத்திற்கான கூட்டத்தை ஏற்பாடுசெய்த முதலமைச்சருக்கு நன்றி.
ஒரு விழுக்காடு ஜிஎஸ்டி
தையல் நல வாரியத்திற்கு ஒதுக்குவதற்காக ஆயத்த ஆடைகள், ஜவுளி விற்பனை கடைகள் மூலமாக ஐந்து விழுக்காடு சரக்கு-சேவை வரியை அரசு வசூலிக்கிறது. இந்த வரியிலிருந்து ஒரு விழுக்காடு சரக்கு-சேவை வரியை தையல் நல வாரியத்திற்கு ஒதுக்கி நலத்திட்டங்களை அளிக்குமாறு கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.
மேலும் 55 வயதைப் பூர்த்திசெய்த தையல் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியமாக 3,000 ரூபாய் வழங்க வேண்டும். மாவட்ட வாரியாக உள்ள தொழிற்சங்கங்களை இணைத்து, தையல் நல வாரியத்தை வலிமைப்படுத்த வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கைவைக்கப்பட்டது.
மேலும் உயர் கல்வி மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 10,000 ரூபாய் வழங்க வேண்டும். அரசுப் பள்ளியில் படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கும்படியும் கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்திய சிறைக்கு மாற்ற கோரிய வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு