தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் ரேவதி என்பவர் நான்கு ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், அப்பகுதியில் கரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த ஜூன் 18ஆம் தேதி நுண் உரம் செயலாக்க மையத்தில் பணியாற்றும் போது, இயந்திரத்தில் அவரின் வலது கை சிக்கி துண்டானது.
இதையடுத்து தஞ்சை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் செயற்கை கை பொருத்தலாம் என தெரிவித்தனர். இது தொடர்பான மருத்துவ சிகிச்சைக்கு மாவட்ட ஆட்சியரிடம் அவரின் மகள் திவ்யா மனு அளித்தும், இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது. வழக்கை விசாரித்த மனித உரிமைகள் ஆணைய பொறுப்பு தலைவர் துரை. ஜெயச்சந்திரன், தூய்மைப் பணியாளருக்கு உரிய மருத்து சிகிச்சை வழங்காதது? குறித்து நகராட்சி நிர்வாக துறை ஆணையர் நான்கு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.