துக்ளக் 50ஆவது ஆண்டு விழாவில் ரஜினி பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியதையடுத்து, இன்று ரஜினி செய்தியாளர்களைச் சந்தித்தார். அச்சந்திப்பில் அவர், 'நடக்காதது எதையும் நான் கூறவில்லை. அதற்காக மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது' என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அவரது இந்தப் பேச்சு பெரியாரிய ஆதரவாளர்கள், அமைப்புகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் ரஜினியின் கருத்து வலதுசாரி சிந்தனையாளர்கள் உள்ளிட்டோர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ரஜினியின் பேச்சுக்கு ஆதரவுக் கருத்தும் எதிர்க்கருத்தும் எழுந்துவரும் நிலையில், பாஜக ஆதரவாளரும் நடிகருமான எஸ்.வி. சேகர் நமது ஈடிவி பாரத்துக்கு தொலைபேசி வாயிலாகப் பேட்டியளித்துள்ளார்.
பெரியார் விவகாரத்தில் ரஜினி, 'மன்னிப்பு கேட்க முடியாது' என்று கூறியிருப்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அவர் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்பது திக, திமுக போன்ற திராவிட கட்சிகளுக்குத்தான் உள்ளதா, மீதி பேருக்குக் கிடையாதா? ரஜினி நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் கூறியுள்ளார். அதில் தப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
சினிமாவில் இருப்பவர்கள் சினிமாவில் வீரமாக நடிப்பார்கள்; மற்ற இடங்களில் கோழையாக இருப்பார்கள் என்று நினைப்பது ரஜினி விஷயத்தில் சரியாக வராது. வாய்க்கு வந்ததைப் பேசும் திராவிட ஆதரவாளர்கள், பெரும்பான்மையான மக்கள் நம்பும் கடவுள்களைக் கொச்சைப்படுத்தியுள்ளனர். அதேபோல் ரஜினியும் ஒரு கருத்து கூறியிருக்கிறார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை.
ரஜினி கூறியது உண்மையில்லையா? பெரியார் இந்துக் கடவுளுக்கு காலணி மாலை அணிவித்து ஊர்வலம் செல்லவில்லையா? அந்த ஊர்வலம் குறித்து எழுதிய புத்தகத்தை இவர்கள் தடைசெய்யவில்லை என்பதை மறுக்கமுடியுமா?
வீரமணியும் ஸ்டாலினும் கழுதையாகக் கத்தினாலும், வரப் போகும் தேர்தலில் ரஜினியை எதிர்த்து நிற்கும் திமுக கூட்டணி 50 இடங்களைக்கூட பிடிக்காது. ஆன்மிக அரசியல் என்று ரஜினி கூறியதால், திராவிட கட்சிகளுடன் அவர் சேரமாட்டார் என்பது தெரிந்துவிட்டது. அதனால்தான் அவர்கள் ரஜினியை அவமானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
குடியரசு தினத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் கொடி ஏற்றினால் மரியாதை செலுத்தாத இந்தத் திராவிட கட்சியினர் நாட்டுப்பற்றை பற்றியும் பேசுவார்கள். எல்லா நிகழ்வுகளையும் தமிழ்நாடு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. ரஜினி 2021இல் அரசியலுக்கு வந்துவிட்டால் இவை அனைத்துக்கும் முடிவுகட்டப்படும்.
ஒரு பத்திரிகையின் ஆண்டு விழா மேடையை ஏன் அரசியல் மேடையாக நினைத்து ரஜினி பேசினார் என்பதே எதிர் தரப்பினரின் கேள்வியாக உள்ளது?
இஸ்லாமிய திருமண மேடையில் ஸ்டாலின் இந்து திருமணத்தை கொச்சைப்படுத்தி பேசினார். அவர் அதை அரசியல் மேடையாக மாற்றவில்லையா? இவர்கள் கல்யாண வீட்டுக்குப் போனாலும் சாவு வீட்டில் பேசுவதைப் போல்தான் பேசுவார்கள். யார் என்ன பேச வேண்டும் என்று தீர்மானிக்க இவர்கள் யார்?
துக்ளக் பத்திரிகையைத் தொடங்கிய சோ, இவர்களை முழுமூச்சாக எதிர்த்து எழுதினார். அவர் பத்திரிகை ஆண்டு விழாவில் என்ன பேச வேண்டும் என்று இவர்கள் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை.
இதையும் படிங்க: ‘சாரி... பெரியார் குறித்த கருத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது’ - ரஜினி திட்டவட்டம்