2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி வெற்றிபெற்றார். அப்போது கனிமொழியின் வேட்புமனு ஆவணங்களில் அவரது கணவர் தொடர்பான வருமான வரித்துறை ஆவணங்கள் முறையாகச் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அதனால் அவரது வெற்றி செல்லாது என்றும் அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர் சந்தானக்குமார் என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் கனிமொழி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அம்மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும் வழக்கு விசாரணையைத் தொடர்ந்து நடத்தலாம் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு எதிராகக் கனிமொழி சார்பில் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கனிமொழியின் வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த வழக்கில் ஏற்கனவே எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுவிட்டதையும் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், நான்கு வாரங்களுக்குப் பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’அரசியலில் ஆகச்சிறந்த பல்டி அடித்த திமுக’ - ராமதாஸ்