சென்னை: சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் ராதா (38). இவர், ’சுந்தரா டிராவல்ஸ்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இவர், நேற்று (ஜூலை.02) பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் நரேந்திரன் நாயரை சந்தித்துப் புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப் புகார் மனுவில், ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி எனது கணவரும் உதவி ஆய்வாளருமான வசந்தராதா மீது விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் செய்தேன்.
அந்தப் புகார் மீது விசாரிக்கமால் விருகாம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாரதி என்னைத் தொடர்பு கொண்டு, கணவருடன் சமாதனமாகப் போகவும், புகாரை திரும்பப் பெறவும் வலியுறுத்தினார். அதைத்தொடர்ந்து, புகாரைத் திரும்ப பெற்றேன். எனது கணவரும் நல்லபடியாக சேர்ந்து வாழ்வதாக எழுதிக் கொடுத்தார்.
இந்நிலையில், எனது கணவர் தொடர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். 'உதவி ஆய்வாளர் பாரதி, இளம்பரிதி ஆகியோர் எனது ஆட்கள்தான். நீ என்ன புகார் கொடுத்தாலும் ஒன்னும் செய்யமுடியாது. காவல் துறையில் எழுதிக்கொடுத்ததையெல்லாம் அழித்துவிட்டேன்' எனக் கூறினார்.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக தகவல் கேட்டபோது, எனது கணவர் எழுதிக்கொடுத்த மன்னிப்புக் கடிதம் இல்லை.
வசந்தராஜாவுக்கு ஆதரவாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்பட்ட விருகாம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளம்பரிதி, பாரதி ஆகியோர் மீதும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: புகைப்படங்களை வைத்து மிரட்டுகிறார் - முன்னாள் காதலன் மீது நடிகை புகார்