சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுகளுக்கு பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன... - சமூக சேவை விருது
தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான நபர்கள்/நிறுவனங்களிடமிருந்து ‘சமூக சேவை’ மற்றும் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ விருதுகளுக்காகப் பரிந்துரைகள் வேண்டி முதன்முறையாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அறிவிப்பு விடுத்துள்ளது.
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ‘சமூக சேவை’ மற்றும் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ ஆகிய துறைகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் தனிநபர்கள் /நிறுவனங்களை அங்கீகரிப்பதற்காகவும், இத்துறையில் மற்றவர்களை ஊக்குவிப்பதற்காகவும் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கவேண்டுமென்று முடிவுசெய்து அதற்குரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆளுநர் மாளிகை வரலாற்றில் இவ்வகையான விருது வழங்குவது இதுவே முதன்முறையாகும். இந்த விருதுகள் வழங்குவதன் மூலமாக தேசத்தில் நேர்மறையான எண்ணங்களைக் கட்டியெழுப்பவும் அவற்றைப் பயன்படுத்தவும் முடியும். செப்டம்பர் 24, 2022 முதல் ‘சமூக சேவை’ மற்றும் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ துறையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சேவைகளை ஆற்றியுள்ள தகுதியுள்ள நிறுவனங்கள்/நபர்களிடமிருந்து பரிந்துரைகள் வரவேற்க்கப்படுகிறது. இவ்விரு விருதுகளுக்கும் சான்றிதழுடன் தலா ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
வரப்பெறும் பரிந்துரைகள் அனைத்தும் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு (Screening Committee) ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தலைவராகக் கொண்ட அந்தந்தத் துறைகள் சார்ந்த அறிஞர்கள் உள்ளடக்கிய இரண்டு தேர்வுக் குழுக்களுக்கு அனுப்பப்படும்.
பரிந்துரைகள் அனுப்ப வேண்டிய முகவரி: ஆளுநரின் துணைச் செயலாளர் & கட்டுப்பாட்டு அலுவலர், ஆளுநர் செயலகம், ஆளுநர் மாளிகை , கிண்டி, சென்னை – 600 022 என்ற முகவரிக்கு அக்டோபர் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். விருதுகள் 26, ஜனவரி 2023 அன்று மாண்புமிகு ஆளுநர் அவர்களால் வழங்கப்படும்.
மேற்கண்ட விருதுகளுக்குத் தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது தகுதியான நபர்களை பரிந்துரைக்கலாம். பரிந்துரைக்கப்படும் நபர், மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலாளர்கள் அல்லது ஓய்வு பெற்ற அரசு செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், இந்திய அரசு, தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பத்மஸ்ரீ விருது பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்டவர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு அந்தந்தத் துறையில் பணியாற்றியிருக்க வேண்டும். விண்ணப்பங்களை awardsrajbhavantamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரையிலும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு