கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகச் சென்னையில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு விமானத்தில் பயணம் செய்கின்றனர். இதனால் சென்னையிலிருந்து தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம், கொச்சி செல்லும் விமானங்களில் இன்றும், நாளையும் நிரம்பின.
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (டிசம்பர் 25) கொண்டாடப்படுகிறது. இந்த முறை வார கடைசியில் கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால் சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் சொந்த ஊருக்கு விமானத்தில் பயணம் செய்கின்றனர்.
இதனையொட்டி சென்னையிலிருந்து, தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம், கொச்சி செல்லும் விமானங்களின் பயணக் கட்டணம் இரண்டு மடங்காக திடீரென அதிகரித்துள்ளது.
கட்டணம் அதிகரிப்பு
சென்னையிலிருந்து, தூத்துக்குடிக்கு வழக்கமான பயணக் கட்டணம் ரூ.4,200. ஆனால் நேற்று (டிசம்பர் 23) 10,400 ரூபாயாக இருந்தது. இன்று (டிசம்பர் 25) பயணிகள் செல்ல பயணிக்க 11,800 ரூபாய் என அதிகரித்துள்ளது.
அதேபோல் மதுரைக்கு வழக்கமான கட்டணம் ரூ.3,800. ஆனால் நேற்றும், இன்றும் ரூ. 7700 முதல் 9,600 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. மேலும் திருவனந்தபுரம் செல்ல 4,200 ரூபாயிலிருந்த கட்டணம், 10,700 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. கொச்சிக்குச் செல்ல 4,000 ரூபாய் இருந்த கட்டணம் 9,500 ரூபாய் வரை அதிகரித்தது.
கட்டணங்களை உயர்த்தவில்லை
இது குறித்து விமான நிறுவன அலுவலர் கூறுகையில், "கட்டணங்களை உயர்த்தவில்லை. விமானங்களில் பல அடுக்கு கட்டணங்கள் உள்ளன. அதில் குறைந்த கட்டணம், மீடியம் கட்டணம் கொண்ட பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.
தற்போது அதிகக் கட்டணம் கொண்ட இருக்கைகள் மட்டுமே உள்ளன. அதுதான் பயணிகளுக்குக் கட்டண உயர்வுபோல் தெரிகிறது. இது வழக்கமான நடைமுறைதான்" என்றனர்.
இதையும் படிங்க: நெதர்லாந்து, கனடாவிலிருந்து சென்னைக்கு கடத்திவந்த போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல்