சென்னை: சூடான் நாட்டில் நடைபெற்று வரும் ராணுவம் மற்றும் உள்நாட்டு படைப் பிரிவினர்களுக்கு இடையேயான மோதல்களினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் உட்பட ஏராளமான இந்தியர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவிக்கின்றனர்.
சூடான் நாட்டில் தற்போது நிலவும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையால், அங்கு சிக்கித்தவிக்கும் தமிழர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தினை தொடர்ந்து தமிழ்நாடு அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சூடான் நாட்டில் நடைபெற்று வரும் இராணுவம் மற்றும் உள்நாட்டு படைப் பிரிவினர்களுக்கு இடையேயான மோதல்களினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் உட்பட ஏராளமான இந்தியர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவிக்கின்றனர்.
அவர்களை மீட்கக்கோரி அங்குள்ள தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினரிடமிருந்து தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கைகள் தொடர்ந்து வருவதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர ஆணைப்படி உடனடியாக, அங்கு சிக்கியுள்ள தமிழர்களின் விவரங்களை பகிரக் கோரியும், அவர்களைப் பாதுகாப்பாக தமிழகம் மீட்கக் கோரியும் தமிழ்நாடு அரசின் சார்பாக கடிதம் மூலம் சூடான் மற்றும் ஜெத்தாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் கோரப்பட்டுள்ளது.
மேலும், சூடானில் உள்ள தமிழர்களுடன் Whatsapp குழுக்கள் மூலமாக தொடர்புகள் உருவாக்கப்பட்டு அவர்களிடமிருந்து பெறப்படும் தகவல்கள் சூடானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உடனுக்குடன் தெரியப்படுத்தப்படுகிறது. தற்போது ஒன்றிய அரசின் "ஆப்ரேசன் காவிரி" என்ற திட்டத்தின் மூலமாக சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு, சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தாவிற்கு அழைத்துவரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் புதுடெல்லி மற்றும் மும்பைக்கு அழைத்து வரக்கூடிய பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
ரஷ்யா-உக்ரைன் போரின் போது, விமானம் மூலம் புதுடெல்லி மற்றும் மும்பைக்கு மீட்கப்பட்ட தமிழர்களை, தமிழ்நாடு அரசின் செலவில் தமிழகத்தில் உள்ள அவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டது போன்று, இந்நேர்விலும் நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்திலும், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம், சென்னையிலும் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டுப்பாட்டு அறை (Control Room) அமைக்கப்பட்டு, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
(புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு விவரங்கள்: 011-2419 3100, 9289516711, tnhouse@nic.in மற்றும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம், சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு விவரங்கள்:+91-96000 23645, nrtchennai@gmail.com).
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் - 10 போலீசார், ஒரு ஓட்டுநர் உயிரிழப்பு!