சென்னை பள்ளிக்கரணை அருகே அதிமுக பிரமுகர் ஜெயகோபால் என்பவர் வைத்த பேனர் சரிந்து விழுந்ததால் நேர்ந்த விபத்தில், சுபஸ்ரீ என்ற அப்பாவி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நடத்து 14 நாட்கள் ஆகியும் இவரின் மரணத்திற்கு காரணமான பேனரை வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இன்னமும் கைது செய்யப்படவில்லை. பல்வேறு விமர்சனங்களையும் கடந்து ஜெயகோபாலை கைது செய்யாமல், அதிமுக அரசு காலம் தாழ்த்திவருகிறது.
இந்நிலையில், சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கை டிஜிபியின் நேரடி கண்காணிப்பில் விசாரிப்பதற்காக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, பேனர் வைத்த ஜெயகோபால் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் இன்றுவரை காவல் துறையினர் அவரைக் கைது செய்யவில்லை என்றும், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் எனவும் திமுக வாதிட்டது.
அதற்கு, சுபஸ்ரீ உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த, பேனர் வைத்த முக்கிய குற்றவாளிகளைப் பாதுகாக்கும், குறைந்த தண்டனை விதிக்கும் வகையிலான சட்டப்பிரிவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழக்கக் காரணமாக இருந்த முக்கிய குற்றவாளி ஜெயகோபால் எங்கே? அவரும் வெளிநாட்டிற்கு தப்பிவிட்டாரா? எனவும் காட்டமான கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சுபஸ்ரீ உயிரிழப்பு விவகாரம்: முன்னாள் கவுன்சிலர் மீது 308 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு!