சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்திருந்த பேனர் விழுந்து, இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்குக் காரணமான அரசு அலுவலர்களைக் கண்டித்து பள்ளிக்கரணை மாநகராட்சி அலுவலகம் முன்பாக அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு, இளைய தலைமுறை என்ற அமைப்பின் சார்பில் தமிழ்மணி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர், மாநகராட்சி அலுவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்துக்குக் காரணமான அதிமுக பிரமுகர் ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்ட தொடர்புடைய நபர்களையும் காவல் துறையினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் தமிழ்நாடு வரவுள்ள நிலையில், மனுதாரருக்கு உண்ணாவிரதம் இருக்க அனுமதியளிக்க முடியாது எனவும் வாதிட்டார்.
மனுதாரர் தரப்பில், இந்த சம்பவத்தைக் கண்டித்து பிரதமர் மோடி தமிழ்நாடு வந்து சென்றபிறகு உண்ணாவிரதமிருக்க அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் இனி நடந்தால், தொடர்புடைய அரசு அலுவலர்களின் மீது குற்றவியல் ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, மேடவாக்கம் பகுதியில் அக்டோபர் 14ஆம் நாளிற்குப்பின் ஒருநாள் உண்ணாவிரதமிருக்க மனுதாரர்களுக்கு அனுமதியளிக்கவேண்டும் என நீதிபதி, காவல் துறையினருருக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிக்க:‘என் மகளின் இறப்பிற்குக் காரணமானவர்களைப் பணிநீக்கம் செய்க!’ - சுபஸ்ரீ தந்தை ஆவேசம்