சென்னை: மத்திய அரசின் கீழ் இயங்கும் கலாக்ஷேத்ரா கல்வி நிறுவனத்தில் பேராசிரியர்கள் மாணவ மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், கல்வி நிறுவனம் நடவடிக்கை எடுக்காததால் இன்று தேர்வுகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களில் அடையாறு கலாக்ஷத்ராவில் பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்வதாக மாணவிகள் பேசிக்கொண்ட விவகாரம் வெளியானது.
இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தனது சமூக வலைதளப்பக்கம் மூலமாக தமிழக டிஜிபி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தது. குறிப்பாக மாணவிகள் அடையாறு கலாக்ஷேத்ரா நிர்வாகத்தில் புகார் அளித்தும், மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து விசாரிக்கும் குழு முறையாக விசாரிக்காமல், கலாக்ஷேத்ரா பெயரைக் கெடுக்க இதுபோன்று பொய்யான புகார்கள் தெரிவிக்கப்பட்டதாக மறுத்தது.
இதனையடுத்து தேசிய மகளிர் ஆணையம் கலாக்ஷித்ரா இயக்குனரையும், குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் இடமும் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக டிஜிபிக்கு தெரிவித்திருந்தது. இந்நிலையில் அடையாறு கலாக்ஷேத்ராவை சேர்ந்த மாணவி ஒருவர் தன் பெயரை பயன்படுத்தி பொய்யாக பாலியல் புகார், சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்திருப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி சென்னை காவல் துறையிடம் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இடம் விசாரணைக்கு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் தமிழக டிஜிபிக்கு விசாரிக்க கூறியதை திரும்பப்பெற்றது. பாதிக்கப்பட்ட மாணவி தன் பெயரில் பொய்யான புகார் சமூக வலைதளத்தில் பரவுவதாக தெரிவித்த காரணத்தினால் தமிழக போலீசார் விசாரிக்கும்படி கூறியதை வாபஸ் பெற்றதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்தது.
இந்த நிலையில் அடையாறு கலாக்ஷேத்ராவில் நேற்று மாலை 3 மணி நேரம் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா ரகசியமாக வந்து நேற்று விசாரணை நடத்திச் சென்றார் . அவர் செல்லும் வாகனத்திற்கு மட்டும் விஐபி எஸ்கார்ட் பாதுகாப்பை வாங்கிக் கொண்டு அவசரமாக சென்னை அடையாறு கலாக்ஷேத்ரா சென்று விசாரணை நடத்தியதாக தகவல் தெரியவந்துள்ளது.
தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா அடையாறு கலாக்ஷேத்ராவில் உள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாலியல் தொந்தரவு தொடர்பான விசாரணையை பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விதிப்படி தனியாக விசாரிக்காமல், மாணவ, மாணவிகள் என அனைவரையும் ஒன்றாக வைத்து விசாரித்ததாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
இதனால் மாணவிகள் அடையாறு கலாக்ஷேத்ராவில் நடந்த பாலியல் தொந்தரவு விவகாரம் தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சில மாணவர்கள் ரேகா சர்மாவிடம் புகார் அளிக்க முன் வந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து காலம் தாழ்த்தி பேராசிரியர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் நிறுவனம் ஈடுபடுவதால் இன்று செமஸ்டர் தேர்வுகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு நீதி வேண்டும் என கோஷமிட்ட மாணவ மாணவிகள் பல ஆண்டுகளாக பலரும் பாலியல் தொந்தரவின் காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றதாகவும் தெரிவித்தனர். பேராசிரியர்கள் நான்கு பேர், தொடர்ந்து நிறுவனத்தால் பாதுகாக்கப்படுவதோடு இன்றும் சில மாணவிகளை நடன நிகழ்ச்சிக்காக ஹைதராபாத் அழைத்துச் சென்றுள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் புகாருக்குள்ளான பேராசிரியர்களை உடனடியாக பணியிடை நீக்க செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும், நிறுவனம் அவர்களை பாதுகாக்கும் நோக்கில் செயல்படுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மதம், சாதி மற்றும் உருவ கேலி என ஆண்டாண்டாக மாணவ மாணவிகள் தொடர்ந்து சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு இல்லாததால் விரக்தி அடைந்து தேர்வுகளை புறக்கணித்து என்று போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
மேலும் கேள்வி கேட்கும் மாணவர்களை இடைநீக்கம் செய்து விடுவோம் என மிரட்டுவதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டினர். 90 விழுக்காடு மாணவ மாணவியர் விடுதியில் தங்கி பயில்வதாகவும், எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள் மிகவும் துன்பப்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளனர்.
மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது நிறுவன துணை இயக்குநர், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். எழுத்துப்பூர்வமான புகார்கள் வரவில்லை என அவர் தெரிவித்த நிலையில், மாணவிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித்தால், சாட்சி உள்ளதா என கேள்வி எழுப்பி துன்புறுத்துவதாக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என துணை இயக்குநர் தெரிவித்ததற்கு மாணவிகள் அதிருப்தி தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர். சென்னை ஐஐடி நிர்வாகத்தை போன்று, மத்திய அரசின் கீழ் செயல்படும் அடையாறு கலாக்ஷேத்ராவிலும் நடக்கும் தவறுகள் மறைக்கப்படுகிறதா என பல்வேறு சந்தேகங்களை எழுந்துள்ளன.
இதையும் படிங்க: இஸ்லாமியப் பெண்களின் ஹிஜாபை கழற்றச் சொல்லி அத்துமீறல் - 7 பேர் கைது!