கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மார்ச் 25ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. பள்ளிகள் எப்போது திறந்து செயல்படும் என்பது இன்று வரை அரசால் அறிவிக்கப்படவில்லை.
தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாணவர்களுக்கான பாடங்களை கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சிகள் மூலம் அரசு நடத்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் இன்று (ஆக. 17) முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்தலாம் என அரசு அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பதிப்புச் செம்மல் கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்றது.
இது குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழரசி பேசுகையில், ''அரசு அறிவித்த வழிகாட்டுதலின்படி மாணவர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளோம். எங்கள் பள்ளியில் ஏற்கனவே ஆயிரத்து 500 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு கூடுதலாக ஆயிரம் மாணவர்களை சேர்ப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் வகையில் பருப்பு, எண்ணெய், சோப்பு உள்ளிட்ட பொருள்களை நிவாரணமாக வழங்குகிறோம். மாணவர் சேர்க்கை தனி மனித இடைவெளியைப் பின்பற்றி நடைபெற்று வருகிறது.
எங்கள் பள்ளியில் தனியார் பள்ளியை விடவும் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது தனியார் பள்ளியில் படித்து வந்த தங்களது குழந்தைகளை, பெற்றோர்கள் மாற்றுச் சான்றிதழ் பெற்று வந்து அரசுப் பள்ளியில் சேர்த்தனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் பேசுகையில், ''தனியார் பள்ளிகள் சிறப்பாக கற்றுத் தருகின்றனர் என நாங்கள் கருதுகிறோம். அவர்களைவிட அரசுப்பள்ளிகளில் சிறப்பாக மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். கரோனாவால் எங்களின் பொருளாதாரமும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் பள்ளிகளில் தற்போதே மாணவருக்கான கட்டணத்தை கட்ட வேண்டுமென வற்புறுத்துகின்றனர்.
பொருளாதார சூழ்நிலையால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் கொண்டு வந்து சேர்த்துள்ளோம். மேலும் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கத் தயாராக உள்ளனர்'' என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்ப் பலகை அகற்றப்பட்டதா? தென்னக ரயில்வே சொல்வது என்ன?