சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு 22ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், “தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2022-23) விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ என்ற இணையதள முகவரிகளில் ஜூன் 22 ந் தேதி முதல் ஜூலை 7 ந் தேதி வரையில் பதிவு செய்யலாம்.
இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விண்ணப்பக்கட்டணமாக 50 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை. பதிவு கட்டணம் மட்டும் 2 ரூபாய் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பக்கட்டணங்களை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம். ஆன்லைன் மூலம் செலுத்த முடியாதவர்கள் சேவை மையங்களில் டிடியாக அளிக்கலாம் . மாணவர்கள் சேர்க்கை குறித்த வழிகாட்டுதல் மற்றும் விபரங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் 044 28260098, 28271911 என்ற எண்ணிலும் தொடர்புக் கொள்ளலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் சதம் அடித்த மாணவி!