சென்னை: சவுகார்ப்பேட்டை பகுதியை சேர்ந்த தம்பதி சுனில் சர்மா மற்றும் சீமா ஷர்மா. சுனில் சர்மா மிண்ட் தெருவில் சொந்தமாக மருந்தகம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் ரோஷினி சர்மா வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள குருஸ்ரீசாந்தி விஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில் மூன்றாமாண்டு பி.காம் படித்து வந்தார். நேற்று விடுமுறை முடிந்து முதல் நாள் என்பதால் ரோஷினி சர்மா வழக்கம் போல கல்லூரிக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்று காலை 9 மணியளவில் கல்லூரியின் நான்காவது மாடி படிக்கட்டில் ரோஷினி, பற்கள் உடைந்து முகத்தில் ரத்த கறையுடன் சுய நினைவின்றி குப்புற விழுந்து கிடப்பதை அவ்வழியாக சென்ற கல்லூரி பேராசிரியர் பார்த்து அதிர்ச்சியடைந்தார். போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதனிடையே மாணவிகள் மற்றும் பெண் பேராசிரியர்கள் உதவியுடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ரோஷினியை அழைத்துச் சென்றுள்ளனர். பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ரோஷினி சர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதனிடையே வேப்பேரி போலீசார் மற்றும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு, கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், காலை 8 மணி வகுப்பிற்கு ரோஷினி சர்மா 8.45 மணிக்கு தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதனால் நான்காவது மாடியில் உள்ள தனது வகுப்பிற்கு வேகமாக படிக்கட்டில் ஏறி சென்றபோது கீழே விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சுமார் 20 நிமிடத்துக்கும் மேலாக அதே இடத்தில் ரோஷினி கிடந்ததாக கூறப்படுகிறது. மாணவி கீழே விழுந்ததால் தான் உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமாக என உடற்கூராய்வு அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சாட்கரோ ஆப் மூலம் மோசடி... சிக்கிய கோவா ஜோடி...