வருவாய்த்துறை அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் நமது ஈடிவி பாரதத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது,
"கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தமிழ்நாடு மக்களை பாதுகாக்க முதலமைச்சர் பழனிசாமி போர்க்கால அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார். 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. 21 நாட்களில் இன்று ஏழாவது நாள் தடை உத்தரவில் இருக்கிறோம். இந்த தடை உத்தரவில் அத்தியாவசிய பணிகளுக்கு விளக்கு அளித்துள்ளோம். மருத்துவம், ஏற்கனவே திட்டமிட்ட திருமணம், இறப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் விவசாய பணிகள், விவசாய இயந்திரங்கள் போக்குவரத்திற்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது . விலக்கு அளிக்கப்பட்ட பணிகளுக்காக வெளியில் வரும்பொழுது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் சுயத் தனிமையை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. விழித்திரு, தனித்திரு, வீட்டிலிரு என்ற தாரக மந்திரத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதனை அனைவரும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
கரோனா தொற்றை தடுப்பதற்காக எல்லா மாநிலங்களில் இருந்து வருபவர்களையும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவரும் முழுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 75 ஆயிரம் பேருக்கு முழுமையான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அனைத்து மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கும் முழுமையான பரிசோதனை செய்யப்படும்.
கரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு முதலமைச்சர் மாநில அளவில் 11 குழுக்கள் அமைத்துள்ளார். வெளிமாநில தொழிலாளர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டு உணவு அளிக்கவும், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பேரிடர் மேலாண்மை துறையின் கட்டுப்பாட்டில் 37 வருவாய் மாவட்டத்திலும் மாவட்ட கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. அதனுடன் மாநில கட்டுப்பாட்டு மையம் தொடர்பில் இருந்து நேரடியாக கண்காணித்து வருகிறது.
144 தடை உத்தரவு ஏழை எளியவர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் பொங்கலின் போது சிறப்பு நிவாரணமாக ஆயிரம் ரூபாய் இரண்டு கோடிக்கு மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு வழங்கினார். தற்போதும் ஏழை எளியவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆயிரம் ரூபாய் கரோனா சிறப்பு நிவாரணம் அறிவித்துள்ளார். சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்களுக்கு தேவையான நிவாரணத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது மக்கள் எல்லா இடங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றனர் ஒரு சில இடங்களில் சவாலாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் மீன், இறைச்சி கடைகளில் ஒரு சில இடங்களில் சவாலாக உள்ளது. அதனை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் முதலமைச்சர் தொடர்ந்து தனிமையை கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறார். எனவே அதனை அனைவரும் கடைபிடித்து மனிதகுலத்திற்கு சவாலாக உள்ள கரோனா தொற்றை வெற்றி கொள்ள ஒத்துழைப்பு தர வேண்டும். நாம் செய்யும் இந்த செயல் மனித குலத்திற்கு, வருங்கால தலைமுறைகளுக்கு ஒரு மிகப்பெரிய பங்களிப்பாகும்.
இதன் பொறுப்பையும் சமூக கடமையும் உணராமல் முக்கியத்துவத்தை அறியாமல் ஒரு சில நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அந்த நிகழ்வுகளும் தேவையான விழிப்புணர்வுடன் கடைபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
அனைவருக்கும் சமுதாய கடமையும், பொறுப்பும் இருக்கிறது. சமூக பொறுப்பை மறந்து சமூகவலைத்தளத்தில் யாராவது செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என எச்சரித்தார்.
இதையும் படிங்க: 'களைக்கட்டட்டும் வீடு கற்பனைத் திறத்தோடு' - மதுரை எம்பியின் ஏற்பாட்டில் கலை இலக்கியப் போட்டிகள்!