சென்னை வில்லிவாக்கம் பலராமபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் தமிழ் அன்பு (33). தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணியை செய்து வருகிறார். செல்போன் டவர் அமைப்பதற்கான பணிகளுக்கான கம்பிகளை தமிழ் அன்பு தன் வீட்டின் அருகே இறக்கி வைத்து நேற்று வேலை செய்து வந்துள்ளார்.
இதனால், இவருக்கு பக்கத்து வீட்டில் இருப்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (60) என்பவர் அந்த இரும்பு கம்பிகளை இழுத்துச் சென்று தெருமுனையில் போட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய தமிழ் அன்பு, இரும்பு கம்பிகள் தெருவோரத்தில் இருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார். இதுகுறித்து, சுந்தரமூர்த்தியும் தமிழ் அன்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருவரும் தாக்கிக் கொண்டனர். அப்போது, சுந்தரமூர்த்திதான் மறைத்து வைத்திருந்த காய்கறி கத்தியை எடுத்து அன்புவின் விலா எழும்பில் குத்தியுள்ளார்.
வலியால் துடித்த அன்புவை அக்கம்பக்கத்தினர் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அறுவை சிகிச்சை மூலம் உள்ளே சிக்கிக் கொண்டிருந்த கத்தியை மருத்துவர்கள் அகற்றினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வில்லிவாக்கம் போலீசார், சுந்தரமூர்த்தி கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.