தமிழ்நாட்டில் நடைபெறும் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை புகார்கள் மீதான தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மனித உரிமை காப்பாளர்களின் தேசிய கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் ஹென்றி, “தமிழ்நாட்டில் நடக்கும் எஸ்.சி, எஸ்.டி, வன்கொடுமைகள் புகார்களைப் பெற்று தேசிய மனித உரிமை ஆணையம் இரண்டு நாட்களாக விசாரணை நடத்திவருகிறது. வெறும் 179 வழக்குகளை மட்டுமே ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஆண்டு தூத்துக்குடியில் நடந்த படுகொலைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் தாமாகவே முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. பின் செப்டம்பர் 25ஆம் தேதி தமிழ்நாடு அரசின் விளக்கத்தை மட்டும் கேட்டுக்கொண்டு வழக்கை முடித்தது.
கடந்த 25 ஆண்டுகால வரலாற்றில் 16 பேர் கொல்லப்பட்ட வழக்கை மனித உரிமை ஆணையம் தாமாகவே மூடிய சரித்திரம் கிடையாது. அது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. நாங்கள் கண்டிப்பாக அந்த வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்வோம் என்று மனித உரிமை ஆணையத்தினர் கூறியிருக்கிறார்கள்" என்றார்.