தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018ஆம் ஆண்டு மே மாதம் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட மே 28ஆம் தேதி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கான தண்ணீர், மின் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கடந்த டிசம்பர் 15ஆம்தேதி உத்தரவிட்டது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்கக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கில், பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடைவிதித்த உச்ச நீதிமன்றம், தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டனர்.
இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,ஸ்டெர்லைட் ஆலையை மூட 2018ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
2018 ஏப்ரல் ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் எடுக்க தடைவிதித்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதிவேக தடையற்ற மின்சாரம் ஸ்டெர்லைட் ஆலைக்கு தொடர்ந்து வழங்க வேண்டும். அடுத்த ஐந்து வருடத்துக்கு ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தேவையான அனுமதி, உரிமம் வழங்க தமிழ்நாடு அரசுக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியும், ஆதரவாக ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவற்றை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் சார்பாகவும் எதிராகவும் இடையீட்டு மனுக்கள் உட்பட 27 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
அதனால் வழக்கில் அரசியல் தலையீடுகளை அனுமதிக்க முடியாது என தெரிவித்து இரண்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்தனர். மேலும், இறுதிகட்ட விசாரணைக்காக வழக்கை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.