ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஸ்வநாதன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
- மாசு ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில் ஆலைகளை மூட தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. அந்த வகையில் நீர் மாசு தடுப்புச் சட்டத்தின் கீழ் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது நியாயமானதுதான்.
- ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதால்தான் ஆலை மூடப்பட்டதாக முன் வைக்கப்பட்ட வாதம் தவறு. அந்தப் போராட்டத்தை ஒரு காரணியாக கூறிக்கொள்ளலாம்.
- தூத்துக்குடி சிப்காட் தொழில் வளாகத்தில் மிகப்பெரிய தொழிற்சாலை என்ற வகையிலும், அதிகக் கழிவுகளை வெளியேற்றுகிறது என்ற அடிப்படையிலும் மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மட்டும் குறி வைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறுவது தவறு.
- விதிகளை மீறுவது சட்டத்தையே மீறியச் செயல் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசியல் சாசனம், நீர் மாசு தடைச் சட்டங்களும் ஆலையை மூட அரசுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
- சுற்றுச்சூழல் மாசு, சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட்டதாலும் ஆலையை இயக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவை மீறி ஆலையை இயக்கியதால் நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்பட்டது.
- அரசியல் சாசனம் 19(1)(ஜி) தொழில் நடத்துவதற்கான உரிமையை வழங்கியுள்ளது. இந்த உரிமைக்கு நியாயமான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த அடிப்படை உரிமை என்பது தனிநபர்களுக்கானதே தவிர, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானது அல்ல.
- அரசுத்தரப்பு வாதம் முடிவடையாததால், விசாரணை நாளைதள்ளி வைக்கப்பட்டுள்ளது.
- இதற்கிடையில், இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள வைகோ, ஹரி ராகவன், ராஜு உள்ளிட்டோரின் பதில் மனுக்களுக்கு பதிலளித்து வேதாந்தா தாக்கல் செய்த மனுவில், அரசியல், தனிப்பட்ட லாபத்திற்காக தங்கள் நிறுவனத்துக்கு எதிராக தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாக கூறியுள்ளது.
இந்த வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்படும்பட்சத்தில் இந்த இணைப்பு மனுதாரர்களுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.