சென்னை: விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அலுவலரின் கணவனான அன்பழகனிடம், வங்கியிலிருந்து பேசுவதுபோல் அடையாளம் தெரியாத நபர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டுள்ளனர்.
அப்போது அன்பழகனிடம் தங்களுடைய எஸ்பிஐ வங்கிக் கணக்கினை புதுப்பிக்க வேண்டும் என கூறி, அவருடயை தொலைபேசி எண்ணிற்கு வரும் ஓடிபி எண்ணை கூறும்படி கேட்டுள்ளனர்.
இதனை உண்மை என நினைத்து, தன்னுடைய தொலைபேசி எண்ணிற்கு வந்த ஓடிபி எண்ணை கூறியுள்ளார் அன்பழகன். இதையடுத்து எண்ணை கூறிய சில நிமிடங்களில் அவருடைய வங்கி கணக்கில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கையாடியுள்ளனர்.
குறுஞ்செய்தி பார்த்து அதிர்ச்சி
இந்நிலையில் அன்பழகனின் வங்கி கணக்கிலிருந்து ரூ.10 ஆயிரம் பணம் எடுத்ததற்கான குறுஞ்செய்தி வந்ததையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்துகொண்டார்.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி பாலியல் வன்புணர்வு - இருவர் கைது