சென்னை: சுங்கத்துறையில் முதன்மை ஆணையராக பணியாற்றி வருபவருக்கு எதிராக அதே துறையில் பணியாற்றி வரும் பெண் வருவாய் பணி அதிகாரி (IRS) கடந்த மே மாதம் பாலியல் புகார் ஒன்றை அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார் விசாரணை குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தனக்கு எதிரான பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு தடை விதிக்க கோரி சுங்கத்துறை முதன்மை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அப்துல் குத்தூஸ், துறை ரீதியாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் தலையிட எந்த முகந்திரம் இல்லை என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து முதன்மை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பதர சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பெண் அதிகாரிக்கு ஒதுக்கிய பணியில் முறையாக செய்யவில்லை என்பதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதால் அது குறித்து விளக்கம் கோரி குறிப்பாணை அனுப்பியதற்கு பதில் அளிக்காமல் மனுதரார்க்கு எதிராக பாலியல் புகார் அளித்துள்ளார்” என வாதிட்டார்.
மேலும், “முறையாக குழு அமைத்து விசாரணை நடைபெறவில்லை. இதனை தனி நீதிபதி கருத்தில் கொள்ளாமல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். எனவே, தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் பாலியல் புகார் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” எனவும் வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதிகள், பணியில் முறையாக செயல்படாத காரணத்தால் பெண் அதிகாரிக்கு எதிராக குறிப்பாணை அனுப்பிய நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் முன் சுங்கத்துறை முதன்மை ஆணையருக்கு எதிரான பாலியல் புகார் அளிக்கபட்டுள்ளது.
மேலும் விசாரணை குழுவில் உள்ளவர்களில் இருவர் புகார் அளித்த பெண் அதிகரியுடன் இணைந்து பணியாற்றிய குழுவில் இடம்பெற்றவர்கள் என்றும், ஆகையால் முதன்மை ஆணையர்க்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் புகார் தொடர்பான துறை ரீதியான விசாரணை மற்றும் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிப்பதாக தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.33 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல்!