தமிழ்நாடு முழுவதும் பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்குவது, இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பணி நிறவல் தொடர்பான கலந்தாய்வு நாளை முதல் மூன்று நாட்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செல்வக்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில் பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்த அரசாணைக்கும், தொடக்கக் கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள விதிமுறைகளுக்கும் முரண்பாடுகள் உள்ளதாகவும் எனவே இந்த முரண்பாடு களையப்பட வேண்டும் என்றும் அதுவரை கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், நாளை முதல் நடைபெற இருந்த கவுன்சிலிங்கிற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கு தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை பதிலளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.