சென்னை: கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு தவிர பிற ஆண்டு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் இன்று(ஆகஸ்ட்.9) முதல் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் முதலாமாண்டு மாணவர்கள் தவிர பிற மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் இன்று முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தவேண்டும் எனவும், அதனால் ஆசிரியர்கள் நேரடியாக கல்லூரிக்கு வர வேண்டும் எனவும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களும், கல்லூரிக்கு வந்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதி நேரடியாக வகுப்பு எடுப்பது போல் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தினார்.
இதுகுறித்து எத்திராஜ் கல்லூரியின் முதல்வர் கோதை கூறும்பொழுது, “அரசின் உத்தரவை பின்பற்றி ஆன்லைன் மூலம் இளங்கலையில் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும், முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கும் பாடம் நடத்தப்படுகிறது. அரசின் வழிகாட்டுதல்படி கால அட்டவணை தயார் செய்யப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
ஆன்லைன் மூலம் எங்களின் இணையதளத்தில் வழியாக பாடம் நடத்துவதால் மாணவிகளுக்கு எந்தவித பிரச்னையும் ஏற்படாது. தற்போது பாடம் நடத்தும்போது பல்வேறு சவால்களை சமாளிக்க வேண்டியுள்ளது. இருந்தாலும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாடம் நடத்துகிறோம். மாணவிகள் வகுப்புக்கு வராவிட்டால் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். தற்போதுவரை 99 விழுக்காடு மாணவிகள் வகுப்புக்கு முழுமையாக வருகின்றனர். அரசின் வழிகாட்டுதல்படி ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: குண்டர் சட்டத்திற்கு எதிராக பப்ஜி மதன் மனு..!