சென்னை: சி.பா. ஆதித்தனாரின் 117ஆவது பிறந்தநாள் இன்று வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ் இதழியலின் முன்னேர் சி.பா. ஆதித்தனாரின் 117ஆவது பிறந்தநாள்!
தினத்தந்தி தொடங்கி எளிய மக்களுக்கு எழுத்தறிவித்து உலக நடப்புகளை அறியத்தந்த அவர்; கழக அரசில் பேரவைத் தலைவராகவும் அமைச்சராகவும் திறம்படச் செயலாற்றியவர்.
அறம் பிறழாது செய்தி வெளியிடுவதே அவரைப் போற்றுவதாகும்!" எனக் குறிப்பிட்டு மரியாதை செய்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் சி.பா. ஆதித்தனாரின் சிலைக்கு அருகில் உள்ள அவரது உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செய்தனர்.
இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப. ஜெயசீலன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 4 மாதம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு