கூடங்குளம் அணு மின் நிலையத்தில் சைபர் தாக்குதல் நடந்துள்ளது என்று கடந்த இரண்டு நாட்களாக பெரிய அளவில் புகார்களும், செய்திகளும் வெளியாகிவருகின்றன. இதில் பல முக்கிய தகவல்கள் திருடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு மறுப்பு தெரிவித்து இந்திய அணுசக்தி கழகம் வெளியிட்ட அறிவிப்பில், “அணு மின்சாரக் கழக கம்ப்யூட்டரில் தீங்கு ஏற்படுத்தும் வைரஸ் இருந்தது உண்மை. ஆனால் கணினிகள் பாதிக்கப்படவில்லை. ஒரு கணினியில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக உடனடியாக இந்தியாவின் சைபர் புகார்களைக் கவனிக்கும் அரசு அமைப்புக்கு (Computer emergency response team) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்டாலின் ‘ட்விட்டர்’ பதிவு
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘NPCIL (கூடங்குளம் அணு மின்நிலையம்) மீதான சைபர் தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததை வெளிப்படுத்துகிறது. பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மத்திய அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும். பாதுகாப்பு வசதிகளின் தயார்நிலை குறித்து தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் விளக்கமளிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.