அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்ட திமுகவின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப்பெண் ஆகிய மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நெல்லை சென்ற அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நேற்று இரவு சென்னை திரும்பியுள்ளார்.
இதையடுத்து, ஸ்டாலின் சென்னை விமானநிலையம் முதல் தேனாம்பேட்டை வரை அவரது இல்லத்திற்கு மெட்ரோ ரயில் மூலம் மக்களுடன் மக்களாக பயணம் செய்தார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தான் இரண்டாவது முறையாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதாகவும், சுரங்கப்பாதை வழியே பயணிப்பது இதுவே முதல்முறை எனவும் கூறினார்.
மேலும், மெட்ரோ ரயிலில் பயணக்கட்டணம் அதிகமாக இருப்பதால் குறைவான மக்களே மெட்ரோவை பயன்படுத்துவதாகவும் கூறினார்.