தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை ராயபுரத்தில் இன்று (ஜனவரி 10) நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
வழிநெடுக தொண்டர்கள் படைசூழ திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ராயபுரம் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து தனது உரையை தொடங்கிய ஸ்டாலின், "திமுகவிற்கு முதல் தலைமையகம் சென்னை ராயபுரத்தில்தான் பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்டது. கிராம சபை கூட்டம் என்கிற பெயரில் நடத்துவதற்கு ஆளும் கட்சி தடை போட்டது, அதனால் நாங்கள் மக்கள் கிராம சபை கூட்டம் என்று மாற்றினோம். திமுக எதை செய்தாலும் அதற்கு ஆளும் கட்சி தடை போடுகிறது. என்ன தடை போட்டாலும் அதை எதிர்த்து திமுக கிராம சபை கூட்டம் நடத்தும்.
பொள்ளாச்சி விவகாரம்
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் சம்பந்தப்பட்டுள்ளார். வேலுமணிக்கு வேண்டிய அதிமுக நிர்வாகி சில நாட்களுக்கு முன்பு கைதுசெய்யப்பட்டார். மேலும் அமைச்சர்களின் மகன் அவர்களுக்கு நெருங்கியவர்கள் என பலரும் தொடர்பில் உள்ளார்கள். அவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும்.
ஜெயக்குமார் மீது குற்றச்சாட்டு
தொடர்ந்து பேசிய அவர், "அமைச்சர் ஜெயக்குமாரை எல்லோரும் முந்திரி கொட்டை என்று சொல்வார்கள். மற்ற துறை அமைச்சர்கள் சொல்ல வேண்டிய பதிலை முந்திக்கொண்டு பதிலளிப்பார். ஆனால் தொகுதி மக்களின் வாழ்வாதாரத்தை கவனிப்பதில்லை. மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் பல முறைகேடு நடந்துள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் 30 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்த எந்த ஒரு திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை தனது வாழ்வை மட்டும் வளப்படுத்திக் கொண்டுள்ளார்" என்று பேசினார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி:ஜன. 16 மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்